Dr. K. Kanthimathi
  • Blog
  • Tribute
  • Gallery
  • Recipes
  • Kolams
  • About

Dr. K. Kanthimathi
A Tribute

அத்தை என்கிற சகோதரி

பெ. துரைசாமி
This heartfelt and brilliant tribute to Dr. Kanthimathi was written by Mr. P. Doraisamy,  M.Sc., M.Phil., Joint Director (retd.), SBHI, Department of Public Health and Preventive Medicine, Government of Tamil Nadu. Mr. Doraisamy was her husband's cousin sister's son, and thus her nephew. Mr. Doraisamy shared a special relationship with his aunt. They connected at a very intellectual level, and spoke for hours on many a topic when he visited. This tribute, written spontaneously by a person who had never written Tamil poetry in his life before, captures Dr. Kanthimathi's essence, the hallmarks, highs and lows of her life and her defining traits in a natural, unexaggerated, flowing style that is at once perceptive, poetic, heartbreaking and uplifting. Mr. Doraisamy says it all just came to him without effort and he was in tears as he wrote it. It is our privilege to present his tribute here in its entirety for everyone (who can read Tamil) to read and experience.

உலகத்தில் ஓர் ஆன்மா
உயர் குணமாய் வாழ்ந்திருந்து
பயணம் முடிந்த பின்பு
பரமனடி சேர்ந்ததுவே
தோன்றிடவும் மறைந்திடவும்
இறைவன் வைத்தான் தேதிகளே
மறைந்து போன பின்னாலும்
பேசும் அவர் சேதிகளே

உண்மை

உதடுகளால் பேசுகின்ற
உலகத்தோர் மத்தியிலே
இதயத்தால் பேசுவது
நீங்கள் கொண்ட நல்ல குணம்
உறவுகளும் நண்பர்களும்
உரையாடி இருக்கையிலே
நல்லதையே பேசுவது
நாங்கள் கண்ட நல்ல மனம்

எளிமை

பொன் நகைகள் அணிமணிகள்
பூணுதற்கு இருந்தாலும்
புன்னகையே போதும் என்று
பூத்து வந்த ஒரு துறவி
மாளிகையில் இருந்தாலும்
செல்வங்கள் நிறைந்தாலும்
நிறைகுடம் போல் தளும்பாமல்
வாழ்ந்து வந்த தனிப் பிறவி
உண்மைக்கு ஒப்பனைகள் தேவையில்லை
மெய் எண்ணம் பொய் வண்ணம் கேட்பதில்லை
வாய்மைக்கு விளம்பரங்கள் தேவையில்லை
- உங்கள்
எளிமைக்கு ஈடு இணை ஏதுமில்லை

கடமை

தாய்க்கு தலைமகளாக
வாழ்ந்திருந்த தொரு காலம்
தந்தைக்கு மகனாக
நேர்ந்ததுவும் ஒரு காலம்
பள்ளி சென்று மாணவியாய்
கல்விகற்ற தொரு காலம்
சொல்லித்தரும் குருவாகி
பயிற்றுவித்த தொரு காலம்

தலைகுனிந்து பிள்ளைகளை
முத்தமிட்ட தொரு காலம்
தலை நிமிர வாழ வைத்து
பூரித்த தொரு காலம்
ஓய்வு நாள் வருமென்று
உழைத்திருந்த தொரு காலம்
ஓய்வு நாள் வந்த பின்னும்
களைத்திருந்த தொரு காலம்

தனிமை

சொந்தங்களும் பந்தங்களும்
சூழ்ந்திருந்த தொரு காலம்
சூழ்நிலைகள் பலமாற
தனித்திருந்த தொரு காலம்
இக வாழ்வின் கடமைகளால்
விழித்திருந்த தொரு காலம்
இறைவழியில் மனம் நாடி
பசித்திருந்த தொரு காலம்

தாய்மை

முகம் மலர வரவேற்கும்
அன்பு நேசம் எங்கே
அகம் குளிர அன்னமிடும்
தாயின் பாசம் எங்கே
மனம் மகிழ மொழி பேசும்
வார்த்தைகள்தான் போனதெங்கே
கடல் கடந்து சென்றாலும்
நினைவுகளில் மீள்வதெங்கே

பொறுமை

உணவைப் பகிர்ந்தீர்கள்
உலக நடப்பைப் பகிர்ந்தீர்கள்
கதைகளைக் கூறினீர்கள்
கவிதைகளும் பேசினீர்கள்
உளம் வலித்த வேளையிலே
உடல் வாடும் போதினிலே
அதை மட்டும் கூறாமல்
ஏன் மறைத்துப் போனீர்கள்?

சிரித்த முகம் பார்த்ததுண்டு
சலித்த முகம் பார்த்ததில்லை
கனிந்த மொழி கேட்டதுண்டு
பழித்த மொழி கேட்டதில்லை
வருத்தமிகு தருணங்கள்
வேதனையைத் தருகையிலே
பொறுத்திருந்து போன உண்மை
இப்போது புரிகிறது

பொறுமைக்கும் கடமைக்கும்
எளிமைக்கும் உண்மைக்கும்
தாய்மைக்கும் வாய்மைக்கும்
என்றுமே இறப்பில்லை
இக்குணங்கள் யாவையுமே
ஒன்றாக அமைந்திருந்த
உங்களுக்கோ பிறப்பில்லை

காலமும் ஓடிவிடும்
காயமும் ஆறிவிடும்
ஞாலமும் மாறிவிடும்
கடந்தவை மறந்துவிடும்
உலகத்தின் இயக்கத்தில்
உடல் மறைந்து போனாலும்
உள்ளத்து உணர்வெல்லாம்
எங்கோ ஒரு வித்தாக
இப்புவியில் வீழ்ந்திருக்கும்
கனவுகளும் நினைவுகளும்
ஆசைகளும் குறிக்கோளும்
அந்த விதைக்குள்ளே
அழியாமல் பதிந்திருக்கும்
விதை முளைத்து விருட்சமாகும்
விருட்சத்தின் வளர்ச்சியிலே
நினைவுகள் நிலைத்திருக்கும்
கனவுகள் பலித்திருக்கும்.

Copyright (c) 2015, Kanthimathi.org. All rights reserved.